Thursday, 23 August 2012

coalgate : பல் இளிக்கும் இந்தியா

நிலக்கரி ஊழல் தொடர்பான சிஏஜி அறிக்கை மீது விவாதம் நடத்த நாங்கள் தயார். பாஜக கோருவது போல பிரதமர் ராஜினாமா செய்ய மாட்டார்” என்கிறார் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால். அதுதானே சரி என்கிறது பாஜக வின் கூட்டணிக்கட்சியான ஐக்கிய ஜனதாதளம். நம்ம நல்ல நேரம் நல்ல பிரதமர் நமக்கு கிடைத்துள்ளார் என்கிறார்கள் காங்கிரசு அமைச்சர்கள். சிஏஜி போட்ட கணக்கு தப்பு என்கிறார் அவர்களது வரைவறிக்கையை திருத்திய யோக்கியர் மன்மோகன் சிங். இதனால் புதன்கிழமை நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.
2004 ஜூனில் இனிமேல் ஏலம் விட்டுதான் நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தர வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்தாலும் காங்கிரசு அல்லாத அரசுகள் சத்தீஸ்கர், ஜார்கண்ட், மே.வங்கம், ஒடிசா மற்றும் ராஜஸ்தானில் அதனை நடைமுறைப்படுத்த தவறியதால்தான் இந்த 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்கிறார்கள் காங்கிரசார். எங்கே இதில் லாபமடைந்த பாஜக தலைவர் நிதின் கட்கரியின் மகனது பெயரை வெளியிட்டு விடுவார்களோ எனப் பயந்து நாடாளுமன்ற விவாதத்தை புறக்கணிக்கிறது பாஜக. “எங்கள் முதலமைச்சர்கள் நிலக்கரி ஏலத்தை எதிர்த்தாலும் முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசுதான்” என்று முகத்தில் வடியும் எச்சிலை துடைக்கிறார் பா.ஜ.கவின் அருண் ஜேட்லி
சிஏஜி மே மாதம் வெளியிட்ட வரைவறிக்கையில் குறிப்பிட்ட இழப்பு 10.7 லட்சம் கோடி ரூபாய் 1.86 லட்சம் கோடியாக எப்படி மாறியது என்பதை சிஏஜி விளக்கவில்லை. விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய கண்காணிப்பு ஆணையர் பிரதீப் குமார்தான் 2006 இல் நிலக்கரி அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராக இருந்து 15 நிலக்கரி வயல்களை தரகு முதலாளிகளுக்கு ஒதுக்கீடு செய்தவர். இவரை சிபிஐ விசாரித்தால் யார் குற்றவாளி, யார் நிரபராதி என்று குழப்பம் வரும்.
2006 லிருந்து 2009 வரை ஒதுக்கப்பட்ட 64 நிலக்கரி வயல்களுக்காக பெறப்பட்ட 1442 விண்ணப்பங்களில் பெரும்பான்மை போலியான நிறுவனங்கள்தான் என்கிறது சிஏஜி. 2004 இல் டன் ஒன்றுக்கு ரூ.2000 ஆக இருந்த நிலக்கரியின் சர்வதேச சந்தை மதிப்பு இன்று ரூ.14,000. நம்மிடமுள்ள 1700 கோடி டன் நிலக்கரியை நூறுக்கும், ஐம்பதிற்கும் தாரை வார்த்துள்ளார்கள்.
இதிலெல்லாம் வியாபாரத்திற்கு வாய்ப்பு இருப்பதாக நாங்கள் அப்போது கருதவில்லை என்கிறது காங்கிரசு. வயல்களை பெறும் நிறுவனங்கள் தயாரிக்கும் மின்சாரத்தை, சிமெண்டை அரசுக்கு குறைந்த விலையில் தர வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால் ஏலத்தில் எடுத்த பல கம்பெனிகள் உற்பத்தியிலே ஈடுபடாதவை. 2ஜி ஊழலில் போலவே அரசிடம் குறைந்த விலைக்கு வயல்களை வாங்கி சர்வதேச சந்தையில் விலை உயர்வதற்கேற்ப விற்க தயாராக இருந்தவை. அரசுக்கு யூனிட் மின்சாரம் 1 ரூபாய்க்கு தருவதாக ஒத்துக்கொண்டு இலவசமாக நிலக்கரி வயல்களைப் பெற்ற அம்பானி, டாடா, ஜிண்டால், பிர்லா, எஸ்ஸார் குழுமம் போன்றவர்கள் 18 ரூபாய்க்கு குறைவாக யூனிட் மின்சாரத்தை தரவில்லை. இதெல்லாம் 1.86 லட்சம் கோடியில் கணக்கிடப்படாத தொகை என்பதையும் மறந்துவிடக் கூடாது. சிமெண்ட் விலை குறைந்திருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த லட்சணத்தில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு போதுமான அளவு நிலக்கரி தரத் தவறினால் அபராதம் வேறு செலுத்த வேண்டும்.
தனியார்மயம் என்ற தனிப்பெரும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என மக்கள் சொத்தான நிலக்கரி வயல்களைக் கொள்ளையடிக்கிறார்கள் தரகு முதலாளிகள். அவர்களுக்கு இயற்கை வளத்தை பங்குவைத்த காங்கிரசும் பாஜக வும் பாராளுமன்றத்தில் சண்டை என சும்மா பம்மாத்து பண்ணுகிறார்கள். திருடனே திருடனைப் பிடி என்று கூச்சலிடுவது திருட்டைக் காப்பாற்றவே அன்றி திருட்டுப் பொருளை மீட்க அல்ல.

No comments:

Post a Comment