Friday 18 November 2011

அண்ணாவும் கருப்பு பணமும்

இந்த கட்டுரை வினவு.com  இருந்து எடுக்கப்பட்டு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது..
http://www.vinavu.com/2011/11/18/black-money/

                                   பாரத தேசத்தில் தருமம் கெட்டு அதர்மம் தலை விரித்து ஆடிக் கொண்டிருந்த நேரத்தில் தேசிய வானில் தோன்றியது ஒரு நம்பிக்கை நட்சத்திரம். மகாராஷ்டிராவின் ராலேகான் சித்தி என்ற கிராமத்தில் புரட்சி நடத்தி பூலோக சொர்க்கத்தை நிறுவி விட்டு அதே முறைகளைக் கையாண்டு பாரத தேசம் முழுவதும் காந்தியின் ராமராஜ்யம் நிறுவ முன் வந்தார் அண்ணா ஹசாரே.
                                 2011 ஏப்ரல் மாதம் அவர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகச் சொல்லி தில்லி வந்ததுமே உயர்நிலைக் குழுவில் இருக்கும் மத்திய அமைச்சர்கள் அவருடன் பேச்சு வார்த்தைகள் நடத்த அணி வகுத்தனர். (10 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் சர்மிளாவுக்கு அத்தகைய கௌரவம் கிடைக்கவில்லை, என்ன இருந்தாலும் அண்ணா நம்ம ஆள் இல்லையா!) பேச்சு வார்த்தை பரபரப்புகளுக்கிடையே இடி முழக்கமென அண்ணா வெளியிட்ட அச்சுறுத்தல்களில் நாடே அதிர்ந்தது. ‘நான் சொன்னபடி கேட்கவில்லைன்னா அழுதுருவேன், ஆமா! ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டம் நிறைவேத்தலைன்னா சாப்பிடாம இருந்துருவேன்!’ போன்ற அவரது தர்ம ஆவேசங்களில் மக்கள் நெக்குருகிப் போனார்கள்.
                                 அண்ணா உண்ணாவிரதம் – சீசன் 1 வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, சீசன் 2-வுக்கு ஆகஸ்டு 15 என்று நாள் குறிக்கப்பட்டது. சீசன் 1-ன் வெற்றியின் மூலம் ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் கொண்டு வருவதற்காக அண்ணா குழுவினரும் அரசாங்க குழுவினருமான ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. (அப்படி ஒரு சட்டம் இல்லாமலேயே நடந்து கொண்டிருந்த 2G வழக்கும், கறுப்புப் பண வழக்குகளும் இந்த உண்ணாவிரத பரபரப்புகளில் மறக்கடிக்கப்பட்டன). 2G ஊழலில் பெரும் பணம் சம்பாதித்த பன்னாட்டுக் கம்பெனிகள் பற்றியோ, உள்நாட்டுத் தரகு முதலாளிகள் பற்றியோ, இதன் மூலம் அடித்த தேட்டையை வெளிநாட்டில் கறுப்புப் பணமாக பதுக்கிய முதலைகள் பற்றியோ அண்ணாவுக்கோ அவரது குழுவினருக்கோ கவலையே இல்லை போல் தோன்றியது. அதைப்பற்றி அவர்கள் பேசவே இல்லை.
                                         இதற்கிடையே அண்ணாவின் மேடையில் போதிய அளவுக்கு ‘போகஸ்’ கிடைக்காத காரணத்தால் கறுப்புப் பண ஒழிப்பு போராட்டத்தை ஆரம்பித்த ‘கறுப்புப் பண திலகம்’ பாபா ராம்தேவ் கூட பிரச்சினையைப் பற்றி குறிப்பாக பேசாமால் பொதுவாக பேசி கிச்சு கிச்சு மூட்டினார். கடைசியில் சில போலீசுகாரர்களை ராம்லீலா மைதானம் பக்கமாக காங்கிரசு அனுப்பியதும் ராம்தேவ் சுடிதார் அணிந்து ‘சீதாதேவாக’ உருமாறி க்ரேட் எஸ்காப்பானவர் தான் – இப்போது வரை போன இடமும் தெரியவில்லை மறைந்த தடமும் தெரியவில்லை.
மக்களின் கவனம் அண்ணா அண்ட் கோவின் குணச்சித்திர நடிப்பில் இருந்த இந்த நேரத்தில் இன்னொரு தளத்தில் அதிசயப்படும் இன்னொரு சாதனை நடந்து கொண்டிருந்தது.
"1.)     2010-11-ல் எஞ்சினியரிங் பொருட்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 79% அதிகரித்தது ($30 பில்லியன் – 1,35,000 ரூபாய்கள்). ஆனால் BSE-500 நிறுவனங்களின் எஞ்சினியரிங் பொருட்கள் ஏற்றுமதி 11% மட்டும்தான் அதிகரித்திருந்தது ($1.38 பில்லியன் – 6,100 கோடி ரூபாய்கள்).
அதாவது சுமார் 1,29,000 கோடி ரூபாய்க்கான ஏற்றுமதி அதிகரிப்பு சிறு-நடுத்தர நிறுவனங்களின் சாதனையால் நடந்து அதற்கான அன்னிய செலாவணியும் நாட்டுக்குள் பாய்ந்து வந்திருந்தது.

2.)     2010-11-ல் வெளிநாட்டு நேரடி முதலீடு $22 பில்லியன் (99,000 கோடி ரூபாய்) என்று அரசாங்க புள்ளி விவரங்கள் சொல்ல, உலகளாவிய நிதி பாய்ச்சல் தொடர்பான புள்ளிவிவரங்கள் $4.5 பில்லியன் (18,000 கோடி ரூபாய்) மட்டுமே இந்தியாவுக்குள் வந்ததாக சொல்லின.அதாவது சுமார் 81,000 கோடி ரூபாய் அளவுக்கான ஓட்டை கணக்குகளில் தெரிகின்றது அல்லது புள்ளிவிவரங்கள் பொய் சொல்கின்றன.

3.)  2010-11ல் உலோகங்கள் மற்றும் உலோகப் பொருட்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் $13 பில்லியனிலிருந்து (71,000 கோடி ரூபாய்) $29 பில்லியன் (1,36,000 கோடி ரூபாய்) ஆக அதிகரித்தது. இதிலும் BSE 500ல் வரும் 11 நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரிப்பு $1 பில்லியனுக்கும் குறைவு (3,700 கோடி) என்று தெரிய வருகிறது. மீதி $15 பில்லியன் (68,000 கோடி அதிகரிப்பு எங்கிருந்து வந்தது?)

4.)  2010-11-ல் தாமிர உபகரணங்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் 8,500 கோடி ரூபாய்களிலிருந்து 36,700 கோடி ரூபாய்களாக அதிகரித்திருந்தது. இது இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியை விட பல மடங்கு அதிகம்."
                                            உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், 2011-12-க்கான ஏற்றுமதியில்  ஏற்பட்ட இந்த வீக்கத்தைக் காட்டி மன்மோகன் கும்பல் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தனர். 2011 ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை ஏற்றுமதி 53% அதிகரித்தது, ஜூலை மாதம் மட்டும் 81% அதிகரித்திருந்தது (அன்னா சீசன் 1க்கும் அன்னா சீசன் 2க்கும் இடைப்பட்ட காலம் இது).
வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகளால் இந்த பண மழையை நம்ப முடியவில்லை. ‘ஏற்றுமதி எந்த நேரத்தில் குறைந்து விடும். ஆண்டு முழுவதுக்குமான வளர்ச்சி 20%ஐ தாண்டாது’ என்று வர்த்தக அமைச்சக செயலர் ராஜீவ் குல்லார் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் ஏற்றுமதி மாதா மாதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியா ஏற்றுமதி செய்யும் நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் – ஏறக்குறைய புதைமணலில் சிக்குண்டு கிடக்கும் நிலையில் ஆளே இல்லாத டீக்கடையில் இந்திய தரகு முதலாளிகள் மிகப் பொறுப்புடன் டீ ஆற்றியுள்ள சாதனையைக் கண்டு வர்த்தகத் துறை அமைச்சகமே அடிவயிறு கலங்கிப் போய் நிற்கிறது.

                              இப்படி கடந்த 18 மாதங்களாக இந்திய பொருட்களை வாங்குவதிலும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் வெளிநாட்டு மக்களுக்கு எப்படி திடீர் ஆர்வம் ஏற்பட்டு விட்டது? இதற்கும் தில்லியில் நடக்கும் அண்ணா-ராம்தேவ் சர்க்கஸூக்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் அலசிப் பார்க்கலாம்.

                                   2G ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், எஸ்பேண்ட் ஊழல், கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் அடிக்கும் கொள்ளை என்று பல்வேறு வகைகளில் சுருட்டப்பட்டு கைமாறிய பணம் வெளிநாட்டு வங்கிகளில் சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பதுங்கிக் கிடப்பதாக  மதிப்பிடப்படுகிறது.வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் கருப்புப் பணம் எப்படி உருவாகிறது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதைப் பற்றி நமது வலையுலக பொருளாதார புலிகள் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள்?
                              சதுர அடி 1000 ரூபாய் வீதம் 2,400 சதுர அடி நிலம் வாங்கும் போது, மொத்த தொகையான 24 லட்சம் ரூபாய்களில் 10 லட்சம் காசோலையாக, வெள்ளைப் பணமாக கொடுக்கப்பட்டு, அதற்கேற்ற முத்திரைத்தாள் வரி, வருமான வரியும் செலுத்தி விட்டு, மீதி 14 லட்சம் ரூபாயைக் கணக்கில் காட்டாமல் கைமாற்றிக் கொள்கிறார்கள். சட்ட விரோதமான இந்தப் 14 லட்சத்தை 1000 ரூபாய் கட்டுகளாக ஒரு மஞ்சப் பைக்குள் போட்டு கக்கத்தில் அடக்கிக் கொண்டு சென்று விடுவார்கள். இது தான் கருப்புப் பணம்.
                              மேலே உள்ளதைப் போல் மிக எளிமையாகவும் மொக்கையாகவும் – சரியாகச் சொல்வதானால் ஷங்கர் பட திரைக்கதை பாணியிலும் – தான் ஐடி துறையில் வேலை செய்யும், பேஸ்புக்கில் இயங்கும், அண்ணா ஷோக்குகள் புரிந்து கொள்கிறார்கள். இது தான் மெழுகுவர்த்தி பிடிக்கும் நடுத்தர வர்க்கத்தின் டக்கு.ஆனால் இது எதார்த்தத்தில் சிக்கலான பல முடிச்சுகள் கொண்டது. ஒரு எளிமையான உதாரணத்தைப் பார்ப்போம்,

                                       சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு 33,000 ஏக்கர் நிலத்தை சதுர அடிக்கு 5 காசு என்ற சலுகை  விலையில் ஒரு கார்ப்பரேட்டுக்கு ஒதுக்குகிறது அம்பிகளின் உள்ளங்கவர் கள்வனான மோடியின் குஜராத் அரசு. ஒரு சில மாதங்களுக்குள் அந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிலத்தை சதுர அடிக்கு 120 ரூபாய் என்ற வீதத்தில் “சட்டப்பூர்வமாகவே” விற்று வளத்தைப் பெருக்குகிறது அந்த நிறுவனம். இதற்குப் பெயர் என்னவென்று கேட்டாள் துக்ளக் சோ ‘வளர்ச்சி’ என்பார். நாம் கொள்ளை என்கிறோம். போகட்டும். பல லட்சம் சதுர அடிகள் நிலம் கைமாறும் போது ஒரு சதுர அடிக்கு 100 ரூபாய் கருப்பில் வாங்கப்பட்டாலும் பணம் பல நூறு கோடி ரூபாய்கள் வரும். இவ்வளவு பணத்தை ரொக்கமாக மஞ்சப் பைக்குள் வைத்தா கையாள்கிறார்கள்? இல்லை.

                     இங்குதான் வருகின்றன வெளிநாட்டு கருப்புப் பண வங்கிகளின் சேவை. விரல் நுனியில் அழுக்கு படாமல், வாங்குபவரின் ஸ்விஸ் கணக்கு எண்ணிலிருந்து விற்பவரின் ஸ்விஸ் கணக்கு எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டு விடும்.இப்படி வெளிநாட்டில், கணக்கில் காட்டாமல், நாட்டு அரசுக்கு தெரியாமல் பணம் வைத்துக் கொள்பவர்கள் அடுத்தடுத்த கார்ப்பரேட் வளர்ச்சிக்கு அந்த பணத்தை சுழற்சியில் விட்டுக் கொள்வார்கள்.

                  இந்தியாவிலிருந்து உப்பு ஏற்றுமதியை அதிகரிக்க அரசு உப்பு ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஏற்றுமதி மதிப்பில் 20% ஊக்கம் என்று ஒரு திட்டம் அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நம்ம கருப்புப் பணக்காரர் உப்பு நிறுவனம் ஒன்றில் பங்காளியாக சேர்ந்து கொள்வார்.வெளிநாட்டில் உப்பு வாங்குபவருக்கு ஒரு டன் உப்பு $100க்குப் பதிலாக $500 என்று இன்வாய்ஸ் செய்து 1000 டன் ஏற்றுமதி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வெளிநாட்டுக்காரருக்கு கூடுதல் தொகையான $4,00,000ஐ தனது சுவிஸ் வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பி விடுவார். $5,00,000 அன்னிய செலவாணி ஏற்றுமதி வருமானமாக நாட்டுக்குள் வருகிறது.

                                அதற்கான $1,00,000 ஊக்கத் தொகையை வாங்கிக் கொள்வார். ஏற்றுமதி வருமானம் என்பதால் வருமான வரியும் கட்ட வேண்டாம். உப்பு நிறுவனத்துக்கு மற்ற செலவுகள் ஏதும் இல்லாததால் பெரும்பாலும் லாபமாக இந்திய வங்கிக் கணக்கில் சேர்ந்து வெள்ளை ஆகி விடும். அந்தப் பணத்தை தேர்தல் செலவுகளுக்கு, நிலம் வாங்குவதற்கு என்று நிறுவன வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

                                இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டுடன் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்தால் 10 ஆண்டுகளுக்கு வரி விடுப்பு, நிலம் இலவசமாக வழங்கப்படும் என்று ஒரு திட்டம் வந்ததும், அந்த திட்டத்திற்கு தனது சுவிஸ் பணத்தை மொரீசியசில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் மூலம் வெளிநாட்டு முதலீடாக கொண்டு வருவார். ஒரே கல்லில் பல மாங்காய்கள்.கொஞ்சம் திரைப்பட பாணியில் உதாரணம் சொல்லப் போனால், தனது எதிரியைத் தீர்த்துக் கட்ட வாடகைக்குக் கொலையாளியை அமர்த்தி அவருக்கு பணமாக சுவிஸ் வங்கி கணக்கில் செலுத்தி தன் மீது சுட்டும் தடயங்களை மறைத்துக் கொள்ளலாம்.
இப்படி சட்ட விரோதமாக நாட்டை ஏய்ப்பதற்கு நூற்றுக் கணக்கான கதவுகளை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கும் பணம் திறந்து விடுகிறது. இந்த பணம் அனைத்தும் சுவிஸ் வங்கிகளின் பாதுகாப்பு பெட்டகங்களில் கரன்சியாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று பொருள் இல்லை. இந்த பணம் சுழன்று கொண்டே இருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்பிலான இணை பொருளாதார நடவடிக்கைகளை செலுத்துகிறது.
இந்தியாவின் இணைப் பொருளாதாரத்தின் அளவு மட்டுமே அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% அளவுக்கு இருக்குமென்றும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35 – 40 லட்சம் கோடிகள் இதில் புரள்வதாகவும் தில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அருண் குமார் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். இதெல்லாம் அப்படியே ஒரு இரகசிய நிலவறைக்குள் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்ட பச்சை நோட்டுகள் என்று புரிந்து கொள்ளக் கூடாது. இதுவொரு இணைப் பொருளாதாரம். நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருப்பது.

                                           ஒரு நாளைக்கு 12 மணி நேரம் ஆப்சைட்டில், ஆண்டுக்கு சில மாதங்கள் ஆன் சைட், மனதை உழப்பும் அலுவலக அரசியல் என்றெல்லாம் போராடி ஒரு ஐடி துறை ஊழியர் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதை  சிறுத்துப் போகச் செய்து விடும் சித்து விளையாட்டு இந்த இணை (parallel) நிதி பாய்ச்சல். 40 லட்ச ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்கலாம் என்று திட்டம் போட்டால் மேற்படி கருப்புப் பணத்தில் மிதக்கும் ஸ்கார்பியோவில் பறக்கும் அழகிரி பார்முலா அரசியல் வாதிகள் அந்த பிளாட்டின் விலையை 80 லட்சத்துக்கு ஏற்றி விடும் பணப் பாய்ச்சலைக் கொண்டு வந்திருப்பார்கள்.
                                          ஐடி துறையினருக்கே இந்த கதி என்றால் மாதம் முழுவதும் போராடி 6,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் இந்த கடலில் எப்படி நீந்தி கௌரவத்துடன் வாழ முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.கடந்த 18 மாதங்களில் ஸ்விஸ் பாதுகாப்பு ஆட்டம் காண ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்த கணக்குகள் இடம் மாற்றப்படும் பேரலைகளின் தெறிப்புகள்தான் நாம் பார்த்த ஏற்றுமதி அதிகரிப்புகளும், முதலீட்டு அதிகரிப்புகளும். அந்த பெரு வெள்ளத்தின் சில துளிகள் கடந்த 18 மாதங்களில் போர்வைகள் போர்த்துக் கொண்டு சுவிஸ் வங்கிகளிலிருந்தும், மற்ற வரி ஏய்ப்பு மையங்களிலிருந்தும் விடுபட்டு வந்திருக்கின்றன.
                                     அதற்கு ஒரு புகை மூட்ட மறைப்புதான் அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் நடத்தி வரும் நாடு தழுவிய ஊழலுக்கு எதிரான போராட்டங்கள். அவற்றில் பெரும்பகுதி இடம் மாற்றப்பட்டு விடுவது வரை அண்ணா சீசன் -2, சீசன் – 3 என்று தொலைக்காட்சி மகிழ்வூட்டல்கள் தொடரும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்...

  ------ அப்துல், வினவு ...

No comments:

Post a Comment