Thursday, 14 February 2013

ஹெலிகாப்டர் ஊழல் : பாரத மாதாவின் புதிய சாதனை !

                                              இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிற மிக மிக முக்கியமான நபர்களை பாதுகாப்புடன் ஏற்றிச் செல்வதற்கான ஹெலிகாப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்திற்காக சுமார் ரூ 360 கோடி லஞ்சம் கைமாறியிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே இத்தாலிய நாளிதழ் லா ரிபப்ளிகாவில் வெளியானது.  ‘இந்தியாவுடனான ஹெலிகாப்டர் டீலில் ரூ 55 கோடி கறுப்புப் பணம் கைமாறியிருக்கிறது’ என்று அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. ‘ இதைக் குறித்து விசாரணை நடத்தியதாகவும் எந்த தவறும் நடக்கவில்லை’ எனவும் இந்திய அரசு அப்போது சொல்லி விட்டது. 

                                                               ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை பெற்றிருந்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனமும், தான் எந்த முறைகேடிலும் ஈடுபடவில்லை என்று சாதித்தது. இப்போது ரூ 360 கோடி லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான பின்மெக்கானிகாவின் தலைவர் கியூசெப் ஒர்சி இத்தாலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ராணுவ தளவாடம் மற்றும் போர் விமான தயாரிப்பு நிறுவனமான பின்மெக்கானிகா இத்தாலியின் இரண்டாவது பெரிய தொழில் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் இத்தாலி அரசு 30 சதவீதம் பங்குகளை வைத்திருக்கிறது.
இதற்கு மேலும் இந்த ஊழலை மறைக்க முடியாமல் ஹெலிகாப்டர்கள் வாங்குவதை நிறுத்தி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இந்திய அரசின்  பாதுகாப்புத் துறை. இராணுவ பயன்பாட்டுக்காக ரூ 8,000 கோடி மதிப்பில் 197 ஹெலிகாப்டர்கள் வாங்கும் இன்னொரு திட்டத்தையும் நிறுத்தி வைத்திருக்கிறது.

                              பிரதமரும் ஜனாதிபதியும் மிக மிக முக்கியமான நபர்களும் போவதற்கு லேட்டஸ்ட் ஹெலிகாப்டர் தேவை என்ற தூரப் பார்வையுடன் அவர்களை ‘ஏற்றிச் செல்வதற்கான ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட எம்.ஐ. 28 ரக ஹெலிகாப்டர்கள் பழசாகி விட்டதால், புதிதாக வாங்க வேண்டும்’ என்று அரசு 1999ம் ஆண்டு முடிவு செய்தது. இந்த ‘முக்கிய’ தேவைக்காக 8 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் 2002ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த டெண்டரில் ‘ஹெலிகாப்டர்கள் 6,000 மீட்டர் உயரம் வரை பறக்கக் கூடியதாக இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டிருந்தது.

                                       இப்போது வாங்கப்பட்டிருக்கும் AW-101 அப்போது EH-101 என்று அழைக்கப்பட்டது.  அந்த ஹெலிகாப்டர் 6,000 மீட்டர் உயரத்தில் பறக்கக் முடியாது என்பதால் டெண்டரில் கலந்து கொள்ள முடியவில்லை.
‘நம் நாட்டின் மிக மிக முக்கிய நபர்கள் 6,000 மீட்டர் உயர இடங்களுக்கு அடிக்கடி போவதில்லை என்பதால் உயரத்தை 4,500 மீட்டராக குறைத்துக் கொள்ளலாம்’ என்றும் ‘ஹெலிகாப்டரின் உள் பகுதியில் 1.8 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்’ என்றும், ‘மூன்று எஞ்சின்கள் உள்ள ஹெலிகாப்டர்களையும் சோதனைக்கு சேர்த்துக் கொள்ளலாம்’ என்றும் வரையறைகள் திருத்தப்பட்டு 2006ம் ஆண்டு 12 ஹெலிகாப்டர்களுக்கான டெண்டர் விடப்பட்டது.

                                                  மூன்று எஞ்சின் கொண்ட AW-101 ஹெலிகாப்டர்களை சேர்த்துக் கொள்ளும்படியாக விதிமுறைகள் மாற்றப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அகஸ்டா வெஸ்ட்லேண்டு, ரஷ்யாவின் எம்.ஐ.17, அமெரிக்காவின் சிகோர்ஸ்கி எஸ்-92 ஆகிய நிறுவனங்களுடன் டெண்டரில் கலந்து கொண்டது. ரஷ்ய நிறுவனம் வங்கி வைப்புத் தொகை செலுத்த முடியாததால் தொழில்நுட்ப பரிசீலனை கட்டத்துக்கு முன்னேற முடியவில்லை. 2008ம் ஆண்டு அமெரிக்க ஹெலிகாப்டரும் இத்தாலிய ஹெலிகாப்டரும் பரிசீலிக்கப்பட்டு அகஸ்டா வெஸ்ட்லேண்டின் ஹெலிகாப்டரை வாங்குவதாக முடிவு செய்யப்பட்டது.

                                 அதன்படி 2010ம் ஆண்டு அகஸ்டாவெஸ்ட்லேண்டுக்கு ரூ 3,600 கோடி செலவில் 12 AW-101 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஆர்டரை பாதுகாப்புத் துறை கொடுத்தது. ‘இந்த ஒப்பந்தத்தை தமக்கு சாதகமாக முடித்துக் கொள்வதற்காக ஒப்பந்தத் தொகையில் சுமார் 10 சதவீதம் (ரூ 370 கோடி) லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அதில் ரூ 200 கோடி லண்டனில் வசிக்கும் கிறிஸ்டியன் மைக்கேல் என்ற இடைத்தரகர் மூலம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்’ இத்தாலிய புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

                                         ’2004 முதல் 2007 வரை இந்திய விமானப்படை தலைமை தளபதியாக இருந்த  எஸ்.பி. தியாகி அகஸ்டா வெஸ்ட்லேண்டுக்கு சாதகமாக டெண்டர் நிபந்தனைகளை திருத்தினார்’ என்று இத்தாலிய புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ‘தியாகியின் உறவினர்களான ஜூலி தியாகி, தோக்சா தியாகி, சந்தீப் தியாகி என்பவர்கள் மூலமாக அவரது அதிகார பூர்வ கடமைகளுக்கு மாறாக செயல்படுவதற்காக பணம் கொடுக்கப்பட்டது’ என்று இத்தாலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏ கே ஆன்டனி

                                                 2005ம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் ‘திருவாளர் தூய்மையாளர்’ என்று அழைக்கப்படும் கேரளாவின் ஏ கே ஆன்டனி. அவரது ‘தூய்மையும் நேர்மையும்’ அழுகிப் போயிருக்கும் இந்திய பாதுகாப்புத் துறைக்கு திரை போட மட்டுமே உதவியிருக்கின்றன.
“இந்த ஒப்பந்தம் தொடர்பாக புகார் எழுந்தபோது, இது தொடர்பான விவரங்களைத் தெரிவிக்குமாறு இத்தாலி அரசை கேட்டுக் கொண்டோம். ஆனால், இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை” என்று சப்பைக் கட்டு கட்டுகிறார் ஏ கே ஆன்டனி. “சி.பி.ஐ. விசாரணையில் தவறு செய்தவர்கள் என்று தெரிய வந்தால் யாராயிருந்தாலும் விட மாட்டோம்” என்றும் ஆன்டனி வீரம் காட்டியிருக்கிறார்.

                                         ’2G அலைக்கற்றை வழக்கில் சி.பி.ஐ.யின் வழக்கறிஞரே குற்றம் சாட்டப்பட்ட கார்ப்பரேட் தலைகளுக்கு சாதகமாக நீதிமன்றத்தில் செயல்பட்டார்’ என்ற தகவல் வெளியாகியிருக்கும் சூழலில் சி.பி.ஐ. விசாரணையில் என்ன தெரிய வந்து விடும் என்ற தைரியம் இருக்கலாம். அல்லது போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் இத்தாலிய குற்றவாளிகளை தப்பிக்க விட்ட அவரது இந்திய எஜமானர்களிடம் முன் அனுமதி வாங்கியிருந்திருக்கலாம். இந்தியா 2006க்கும் 2010க்கும் இடையே உலக ஆயுத இறக்குமதியில் ஆண்டு தோறும் முதலிடத்தை பிடித்திருக்கிறது.  அடுத்த 10 ஆண்டுகளில் இராணுவத்துக்காக சுமார் ரூ 3.4 லட்சம் கோடி செலவு செய்யப் போவதாக அரசு திட்டமிட்டுள்ளதால் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

                                                       நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் பணத்தை வைத்து மஞ்சள் குளிக்கும் மோசடி பேர்வழிகள்தான் அமைச்சர்கள், அதிகாரிகள், இராணுவத் தலைவர்கள் என்று சீருடை அணிந்து வலம் வருகின்றனர். ஆயுதங்களையும் கருவிகளையும் விற்று நம் நாட்டின் பணத்தை கொள்ளை அடிப்பதற்கு கணிசமான அளவு லஞ்சம் கொடுத்து இவர்களை குளிர்விக்கின்றனர் ஆயுதங்கள் விற்கும் பன்னாட்டு முதலாளிகள்.

                        பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய அரசியல்வாதிகள், இராணுவம் என்று கூட்டாக நடத்தும் சுரண்டலை இந்திய மக்கள் மீது தொடரும் பனிப்போர் என்று அழைக்கலாமா?



நன்றி : வினவு இணையதளம்

Wednesday, 13 February 2013

விஸ்வருபம் : மீண்டும் தனிமைப்படும் இஸ்லாமியர்கள்

   25 இஸ்லாமிய கூட்டமைப்பு, இஸ்லாமியர்களை வேண்டுமானால் ஒன்றுபடுத்தி இருக்கலாம்..ஆனால் இவர்களின் திரைப்படத்தை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டமும், அதற்கு பின்னால் நடந்த அரசியல் சதி வலைகளும், இஸ்லாமிய சமுதாயத்தை, சமுகத்தில் மற்ற மக்களிடம் இருந்து தனிப்பட்டு நிற்க வைத்துள்ளதாகவே தோன்றுகிறது..
    ஒரு திரைப்படத்தால் ஒரு சமுதாயத்தின் பார்வை மாறிவிடும் என்று சொல்வதில் உண்மை இருந்தாலும், இவர்களின் போராட்டம் வாலை விட்டு தும்பை பிடித்த கதையாக உள்ளது..சமுகத்தில் மக்கள் தங்களை, தனி குழுவாக பார்பதை நிறுத்த இவர்கள் என்ன செய்தார்கள்.மற்ற மதங்களில் உள்ள மக்களிடம் எவ்வகையான தொடர்பை இவர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதே இப்பிரச்சனையின் சாராம்சம்..
   இவர்களின் இந்த போராட்டத்திற்கும், மற்ற மத வெறி அமைப்புகள் நடத்தும் போராட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை இவர்களுக்கு உள்ளது..மத ரீதியிலான எந்த போராட்டமும், எதிர் தரப்பை இவர்களிடம் இருந்து விலகி செல்லவே வழி வகுக்கும் என்பதை இவர்களே இந்திய சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ்க்கு  தெளிவாக எடுத்து சொன்னவர்கள் ..இதே தவறை ஏன்  மீண்டும் இவர்களே செய்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விகுறி..
      
விஸ்வரூபம் மாதிரியான குப்பை மசாலாக்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக பொதுப்புத்தியில ் நிறுவுவதற்கு உதவுகிறது  என்பதே படம் வெளியாவதற்கு முன்பு இஸ்லாமிய இயக்கங்களின் குற்றசாட்டு..இதை திரைப்படங்கள் மட்டுமே செய்யவில்லை..பெரும்பாலான காட்சி, செய்தி ஊடகங்கள் இதைதான் செய்து வருகின்றன..அப்சல் குரு இதற்கு ஒரு சிறந்த உதாரணம்..கைது செய்து காவல்துறை இவரின் படத்தை வெளியிட்ட உடனேயே, இவரை திவிரவாதியாக அடையாளமிட்டு செய்தி வெளியிட்ட இவைகள்..இதுவே உச்ச நீதிமன்ற இறுமாப்பு நீதிபதிகள், இப்படி ஒரு கொடூர மரண தண்டனை கொடுக்க வழிவகை செய்து உள்ளன ..இதற்கு என்ன செய்ய போகின்றன இந்த அமைப்புகள்.
 
தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக சில அரசியல் வியாதிகளின் சூழ்ச்சியில், ஒட்டுமுத்த இஸ்லாமிய மக்களை தனிமை படிதியுள்ளன இந்த அமைப்புகள்